கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், இலங்கை அரசாங்கம் நேற்றிரவு விடுதலை செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்ட, ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் நேற்றிரவு 11 மணியளவில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் சுமார் 48 மணிநேரமாக, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர். 48 மணிநேரத்துக்கு மேல் தடுத்து வைக்க நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அந்த காலஅவகாசம் முடிவடைய ஒரு மணிநேரம் முன்னதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகள் முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் கைது அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், இந்த விவகாரம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.




