வவுனியாவில் பாஸ் நடைமுறையினை பெற்று முறைகேடு : 10 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

3516

வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டு கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினருடன் இணைந்து அரசாங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

பயணத்தடையின் போது மக்கள் பாதிப்படையாத வண்ணமும் மக்கள் ஒன்று கூடுவதினை தடுக்கும் முகமாகவும் வவுனியா பிரதேச செயலகத்தினால் மக்களை தேடி வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்கும் நடமாடும் வர்த்தகர்களுக்கும் பாஸ் நடைமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாஸ் நடைமுறையினை பெற்று வர்த்தக நிலையத்தினை முழுமையாக திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டமை, ஒர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக பாஸ் பெற்று வேறு கிராமங்களில் வியாபாரம் செய்தமை,

மாற்றுத் தேவைக்கு பயன்படுத்தியமை, வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி பெற்று அதனை மேற்கொள்ளாது ஒர் இடத்தில் வாகனத்தினை நிறுத்தி மக்களை ஒன்றுகூட்டியமை போன்ற பல முறைப்பாடுகள் சுகாதார பிரிவினருக்கு கிடைத்ததையடுத்து,

பண்டாரிகுளம் சுகாதார பரிசோதகர் வாகீசன், ஈச்சங்குளம் சுகாதார பரிசோதகர் விதுர்சன் தலைமையிலான குழுவினர் பண்டாரிகுளம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பாஸ் விதிமுறை மற்றும் பயணத்தடை விதிமுறை ஆகியவற்றினை மீறி செயற்பட்ட வர்த்தகர்களின் பாஸ் சுகாதார பிரிவினரினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு எழுதப்பட்டு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடமாடும் வர்த்தகர்கள் என 10 வர்த்தர்களுக்கு எதிராகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மக்களை வீட்டிலே பாதுகாப்பாக இருந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி நாடு வழமைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் பொலிஸாரினால் மூடப்பட்டதுடன் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதி பிரபல சுப்பர் மார்கட் வர்த்தக நிலையமும் பாஸ் நடைமுறையினை மீறி செயற்பட்டமையினையடுத்து பிரதேச செயலாளரினால் பாஸ் பறிமுதல் செய்யப்பட்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.