மகனுக்காக 300 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை : நெகிழ்ச்சிக் காரணம்!!

1983

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கனிகன கோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார்.

மைசூரில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் கூட தவறவிடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். சிறுவன் 18 வயதை அடைவதற்கு முன்னர் மருந்துகள் நிறுத்தப்பட்டால் கால்-கை வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் மகனை பெங்களூரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமுடியாமல் ஆனந்த் தவித்தார்.

ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு சென்றடைந்தார் ஆனந்த். கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

ஆனந்த்தின் முயற்சியை எண்ணி நெகிழ்ந்து போன அவர்கள் ஆனந்தின் மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினர்.

அதை பெற்றுக்கொண்டு ஆனந்த் அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக அவர் 300 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளார்.