வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரக்குறிச்சி சிங்கை நகரைச் சேர்ந்த தில்லையம்பலம் விமலநாதன் (41) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு நபர்கள் இணைந்து இவரை வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக இருந்த பகைமையே இவரது கொலைக்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இவர், இதே நபர்களால் வெட்டப்பட்டு படுகாமயடைந்த நிலையில் சிகிச்சை பெற்றவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலையும் இவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில், மேற்குறித்த குடும்பஸ்தர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புகின்ற வழியில், வீட்டுக்கு அருகாமையில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பருத்தித்துறைப் பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





