வவுனியாவில் வெண்ணெய் பொதியில் தமிழ் மொழி புறக்கணிப்பு : இளம் ஊடகவியலாளர்களினால் முறைப்பாடு!!

3196

தமிழ் மொழி புறக்கணிப்பு..

பொண்டேரா நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை காரியாலயத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழியில் பிரசுரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசத்திற்கு ஏற்றுமதி செய்வதால் சீன மொழியும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுள்ளது.

கடந்த 2020.08.12ம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை (அதி விசேஷடமானது) வெளியானதில் (2188/31 ஆம் இலக்கம்) தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அத்தகைய பொருட்கள் / பண்டங்களின் பொதிகள், கொள்கலன்கள் அல்லது உறைகளின் மீது,

அதிகூடிய சில்லறை விலை, தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி, உற்பத்தித் திகதி, நிகர நிறை அளவு, உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நாடு என பல விபரங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தெளிவாகத் தெரியும் வகையில் அச்சடிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மக்கள் நுகர்வின் போது சிரமங்களை எதிர்கொள்வதாக ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனையடுத்து,

வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன், ராஜேந்திரன் சஜீவன் ஆகியோர் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட அங்கர் வெண்ணெய் உற்பத்தி பொருள் ஒன்றினை வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்தமையுடன் அது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன், ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நிறுவனம் மீது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை (அதி விசேஷடமானது) யினை மீறி செயற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.