வவுனியாவில் பயணத் தடை அனுமதியை தவறாக பயன்படுத்தி வியாபார நிலையங்களை திறந்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்ய வேண்டும் : திலீபன் எம்.பி!!

2678

பயணத் தடை..

பயணத் தடை அனுமதியை தவறாக பயன்படுத்தி வியாபார நிலையங்களை திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல் வேண்டும் எனவும், பாஸ் அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் என பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொவிட் நிலமைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நேற்று மாலை (04.06) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இக் கலந்துரையாடலில் வைத்திய அதிகாரிகளிடம் தற்போதைய நிலைமை தொடர்பாக கேட்டறியப்பட்டதோடு, அவர்கள் கொவிட் பரவலை கட்டுப்படுத்த எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பயணக்கட்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சுகாதார பிரிவினர் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளிலும் கஸ்டப்படும் நிலையில் அவர்களுடன் இராணுவத்தினரும், பொலிசாரும் கட்டாயம் இணைந்துகொள்ளல்,

மரக்கறி உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதை உடன் கண்காணித்து நிறுத்தப்படல், 5000 ரூபா பணத்தை பெறும் வறுமைப்பட்டவர்களிடம் இன்சூரன்ஸ் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பணம் வசூலிப்பதற்கு தடைவிதித்தல்,

5000 ரூபா பணத்தை தமது அலுவலகத்தில் கொடுப்பது மட்டுமல்லாது அனைத்து கிராமங்களிலும் ஓர் இடத்தை தெரிவு செய்து வழங்குதல், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல்,

வியாபார நிலையங்களை திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல், பாஸ் அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபனால் அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.