வவுனியாவில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படும் மரக்கறிகள்!!

2973

மரக்கறிகள்..

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு பயணத்தடை நேரத்தில் அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செயயப்பட்டு வருகின்றது.

கொரோனா அ.ச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் மக்கள் தமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகளை வழங்குவதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தாலும், பிரதேச செயலகத்தாலும் பலருக்கும் பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெற்றவர்கள், ஏற்கனவே பாதிப்படைந்துள்ள விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்து இரண்டு, மூன்று மடங்கு இலாபம் வைத்து மக்களுக்கு மரக்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த கூலி வேலை செய்து அன்றாட சீவியத்தை போக்கும் மக்களும் மரக்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.

இதன் மூலம் உற்பத்தியாளரும், பெறுனரும் பாதிப்படைய இடைத்தரகரான வியாபரிகளே அதிக இலாபத்தை பெறுகின்றனர். இதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் உடந்தையாக செயற்படுகின்றது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் மரக்கறிகளின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது.

அந்த விலையில் விவசாயிகள் பாதிக்கும் வகையிலும், இடைத்தரக்கர்களாக செயற்படும் வியாபாரிகள் அதிக லாபம் பெறும் வகையிலும் அந்த விலைப்பட்டியல் அமைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் கத்தரிக்காய் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் வெண்டிக்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுன்றது.

சில இடங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கும் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கமநல அபவிருத்தி திணைக்களம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் குறித்த திணைக்களத்திற்கு எதிரான பதிவுகள் வைரலாகி வருகின்றன.