வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

2958

சுகாதார ஊழியர்கள்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து ‘தீர்வுகள் தாமதம் பிரச்சனைகள் முடிவற்றவை ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததுடன், வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஒண்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (11.06) காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மதியம் 12 முதல் 12.30 வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, ‘சுகாதார துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, பயணத்தடை நேரத்தில் அவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடு, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு தேவை, சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்று’ உள்ளிட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளரின் நன்மை கருதி சுகாதார ஊழியர்கள் சேவை வழங்கிய போதும், ஏனைய நோயாளர் விடுதிகளில் வைத்தியர்களே முழுமையான சேவைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.