மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே பேச்சுவார்த்தை : ஜெ.ஜெயலலிதா மீண்டும் அதிரடி நிபந்தனை!!

445

Jaya

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் வரும் 25 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து கடந்த ஆண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நினைவுகூர்கிறேன். பாக்ஜல சந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களை எனது கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.

மீனவர்கள் தினந்தோறும் படும் துன்பங்களைப் போக்கும் வகையில், தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன்படி, கடந்த ஜனவரி 27ஆம் திகதியன்று, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை:

சென்னையைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில் மார்ச் 13ஆம் திகதி நடத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதேசமயம், இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கும் நடவடிக்கையைப் பொருத்தே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அந்த நாட்டு அரசு விடுவித்தது. நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 39 பேருடன் அவர்களுடைய 18 படகுகளும் விடுவிக்கப்பட்டன.

மீனவர்கள் விடுவிப்புக்குப் பிறகு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மார்ச் 25ஆம் திகதி நடத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இந்தப் பேச்சுவார்த்தையை அனைத்து நிலைகளிலும் சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வரும் சூழலில், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் 74 பேர் மற்றும் அவர்களுடைய 18 படகுகளை கடந்த 19ஆம் திகதியன்று பிடித்துச் சென்றுள்ளனர்.

கொந்தளிப்பான சூழ்நிலை:

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இப்போது நடந்துள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இலங்கைக் கடற்படையின் இந்தச் செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகக் காரணமாக அமையும்.

கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மத்தியில் நிலவும் கொதிப்பான சூழலைக் குறைத்து சாதகமான, அமைதியான நிலையை ஏற்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழலில், இலங்கைக் கடற்படையின் திடீர் கைது சம்பவங்கள், கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த 19 ஆம் திகதியன்று, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 74 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 18 படகுகளை விடுவிக்க உங்களது தலையீடு அவசியமாகும். மீனவர்களை விடுவிக்கும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கையை எடுத்தால்தான், இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த முடியும்.

எனவே, இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை விடுவித்தால் மட்டுமே வரும் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.