எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!!

773

எரிவாயுவின் விலை..

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து வாழ்க்கைச் செலவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் திட்டத்தையும் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதி கோரி இரண்டு நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப் கேஸ் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து விவாதிக்க அமைச்சரவை குழு நாளை கூடும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு எரிவாயு ஒரு சிலிண்டர் (கொள்கலன்) விலையை 700 ரூபாயால் உயர்த்த வேண்டும் என்று இரண்டு நிறுவனங்கள் கோரியுள்ளன, எனினும் அந்த அதிகரிப்புக்கு அரசாங்கம் உடன்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு எரிவாயு நிறுவன பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாற்று திட்டங்களுக்கு குழு அழைப்பு விடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு சிலிண்டருக்கு (கொள்கலனுக்கு) சுமார் 300 ரூபா அதிகரிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பேருந்து கட்டணங்கள், வெதுப்பக உற்பத்திகள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் என்பனவும் அதிகரிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-