மோடிக்கு முதலிடம், ஜெயலலிதாவுக்கு இரண்டாமிடம்!!

422

Modi

கூகுள் இணையதளத்தில் அதிகம் பேர் தேடிய முதலமைச்சர்களில், நரேந்திர மோடி முதல் இடத்தையும், ஜெயலலிதா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் 16வது பாராளுமன்ற தேர்தல் திகதிகள் நெருங்கி வந்துகொண்டிருக்கிற நேரத்தில், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது பொதுமக்களின் பார்வை திரும்பி இருக்கிறது.

தேர்தலில் அவர்கள் சேர்ந்துள்ள கட்சிகள் வெற்றி பெறுவதை உறுதிப்படுவதற்காக, இவர்கள் ஆற்றப்போகிற பங்கு மற்றும் நடவடிக்கைகள் மீது வாக்காளர்களின் கவனம் அதிகம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சரின் செயல்பாடும், வெற்றியும் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், தேசிய அளவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போதே மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி முதல் கடந்த 13ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களில் யாரை பொதுமக்கள் அதிக முறை இணையதளத்தில் பார்வையிட்டுள்ளனர், தேடியுள்ளனர் என்பது குறித்து கூகுள் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் இந்தியாவில் உள்ள மாநில முதலமைச்சர்களில், நரேந்திர மோடி (குஜராத்) முதல் இடத்தையும், ஜெயலலிதா (தமிழ்நாடு) 2வது இடத்தையும், அகிலேஷ் யாதவ் (உத்தர பிரதேசம்) 3வது இடத்தையும், மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) 4வது இடத்தையும், நிதீஷ் குமார் (பீகார்) 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இணையதளத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட பா.ஜ.க. முதலமைச்சர்களிலும் நரேந்திர மோடியே முதல் இடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தை வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்) பெற்றுள்ளார்.

அதிகம் பேரால் தேடப்பட்ட காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்களில் தருண் கோகோய் (அசாம்) முதல்- இடத்தையும், உம்மன் சாண்டி (கேரளா) 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.