கொரோனா தாக்கத்தால் மரணிப்பவர்களின் உடலை தகனம் செய்ய பூந்தோட்டம் மின் மயானத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (18.06) மேலும் தெரிவித்ததாவது,
கொரோனா தொற்று காரணமாக வடக்கிலும் உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல் வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் இலத்திரனியல் மயானத்தில் சுகாதாரப் பிரிவினரால் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த மின் மயானத்தில் தகனம் செய்வதற்கு நகரசபையால் உடலம் ஒன்றுக்கு 7000 ரூபாய் வீதம் அறவிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போதை பயணத்தடை மற்றும் கோவிட் தாக்கம் என்பவற்றால் பல குடும்பங்கள் வருமானம் இழந்து தவிப்பதுடன்,
உடலத்தை தகனம் செய்வதற்குரிய பணத்தை செலுத்த முடியாத நிலையிலும் இருக்கின்றனர். இதனால் கோவிட் தொற்றால் இடம்பெறுகின்ற இறப்புக்களுக்குரிய உடல்களை, தமது குடும்ப நிலை தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் வருபவர்களுக்கு இலவசமாக மின் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி வழங்க தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.