வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் எழுமாறாக 55 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!!

1368

பிசீஆர் பரிசோதனை…

கொரோனா தீவிரமடைந்துள்ளதையடுத்து வவுனியா – சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் இன்று (22.06.2021) காலை தொடக்கம் மதியம் வரை எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளதுடன் 07 பேர் தொற்றாளர்களாக அப் பகுதியில் நேற்று (21.06) இனங்காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அப் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயமாதாபுரம் பகுதியில் வைத்தியர் பிரசன்னா தலமையிலான சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக சகாயமாதாபுரம் மற்றும் வைரவகோவிலடிப் பகுதிகளில் முற்றாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வீதியில் நின்றோர் மற்றும் வீடுகளில் இருந்தோர் என 55 பேருக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.