12 மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு விற்ற சிறுமி : நெகிழ வைக்கும் பின்னணி!!

1074

இந்தியாவில்…

பள்ளி பாடங்களை ஒன்லைனில் படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கி மாணவி ஒருவக்கு தொழிலதிபர் உதவி செய்துள்ளார்.

இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் 11 வயதான துள்சி குமாரி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஒன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆறாம் வகுப்பு மாணவியான துள்சி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அவரால் ஒன்லைனில் படிக்க முடியவில்லை.

மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் போதிய வசதியும் இல்லை. இதனால் தந்தையின் வழியே சிறுமி துள்சி குமாரியும் சாலையோரத்தில் மாம்பழங்கள் விற்க தொடங்கினார்.

அதில் இருந்து கிட்டும் பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், துள்சி தொடர்பில் தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு சென்று துள்சியை தேடி கண்டுபிடித்தார்.

துள்சியிடம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு 12 மாம்பழங்களை வாங்கினார். இதனையடுத்து அதற்கான தொகையை துள்சியின் தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஒன்லைன் வழியாக செலுத்தினார்.

இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஒன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என துள்சியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். ஹீட்டேவின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.