வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தொலைக்கல்வி ஆரம்பித்து வைப்பு!!

2603

மாணவர்களுக்கான தொலைக்கல்வி…

கோவிட் தாக்கம் காரணமாக பாதிப்படைந்துள்ள மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொலைக்கல்வி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (05.07) காலை பாடசாலையின் கணினி கற்றல் வள நிலையத்தில் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச தொலைக்கல்வி மத்திய நிலையங்களை தாபித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஒரு பிரதேச தொலைக் கல்வி மத்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கோவிட் விடுமுறை காலத்து கற்றல் செயற்பாடுகளின் போது இணையத்தள வசதிகள் அற்ற தரம் 11 மற்றும் தரம் 6 இனை சேர்ந்த 20 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன. இது தொடர்ச்சியாக தரரீதியாக நடைபெறவுள்ளது.

மாவட்ட ரீதியான இவ் ஆரம்ப நிகழ்விற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய குலசிங்கம் திலீபன், வவுனியா தெற்கு வலய வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் உள்ளிட்டோர் வருகைதந்து நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துடன், பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அதிபருடன் கலந்துரையாடி இருந்தனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2000 மத்திய நிலையங்களில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.