வவுனியாவில் குள எல்லைக்குள் புதிதாக கட்டப்பட்ட மீன் சந்தை : மக்கள் பாவனைக்கு முன்னரே அகற்றுமாறு உத்தரவு!!

3089


குழுமாட்டு சந்தியில்..


வவுனியா குழுமாட்டு சந்தியில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் பல மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்சந்தையினை அகற்றுமாறு வவுனியா கமநல திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


எனினும் குறித்த கட்டிடம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் அமைந்துள்ளமையினால் குளத்தின் அபிவிருத்தி பணிகள் , குள புனரமைப்பு , விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கல் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் வவுனியா கமநல திணைக்களம் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளது.


கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் கட்டப்பட்ட குறித்த மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்தினை அகற்றுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஸ்னுதாசன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, எமது அனுமதியின்றி குளத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வவுனியா தெற்கு பிரதேச சபையினால் இக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டடம் கட்டப்படும் போதே நிறுத்துமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் கட்டளை வழங்கப்பட்டது. அதனையும் மீறி தொடர்ந்தும் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கினால் எம்மால் குள புனரமைப்பு, அபிவிருத்தி போன்ற பணிகளுக்கு தடங்கல் ஏற்படலாம் அதன் காரணமாக இக் கட்டிடத்தினை அகற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

வவுனியாவில் குளங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் எம்மால் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல்களும் மேற்கொண்டுள்ளோம். குளத்தினை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெறும் என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் இருவரையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பல மில்லின் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் முன்னரே அகற்றும் நிலை உருவாகியுள்ளது. குள அணைக்கட்டின் கீழ் அனுமதியின்றி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கட்டிடத்தினை நிர்மானித்தது ஏன்? மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.