வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட பாஸ் நடைமுறை அறிமுகம்!!

1642

பாஸ் நடைமுறை..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட செல்வதற்கு உறவினர்கள் ஒருவர் மாத்திரம் பார்வையிட தக்கமுறையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று கடுமையாக உள்ள காலத்தில் நோயாளிகள், பார்வையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரதும் நலன், பாதுகாப்பு கருதி இந் நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்வதுடன், நோயாளர்கள் மருத்துவ ஆலோசனை தேவைப்படுமிடத்து தவறாது எவ்வித அச்சமுமின்றி வைத்தியசாலையை அணுகமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத் தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்ப்பது அவர்கள் நலனிற்கு உகந்த செயலாகும்.

எமது மக்கள் பெருமளவில் தடுப்பூசிகளை பெற்று வவுனியா மாவட்டம் பாதுகாப்பானதாக உறுதிப்படுத்தப்படும் வரையில், வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட செல்வதற்கு ஒர் நேரத்தில் ஒர் உறவினர்கள் மாத்திரம் செல்வதற்கு மக்களின் பூரண ஆதரவை வைத்தியசாலை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அதிகளவான கொரோனா தடுப்பூசிகளை மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.