அடிக்கடி தொலைபேசியில் உரையாடிய மகள் : தாயால் பறிபோன உயிர்!!

1098

தமிழகத்தில்..

காரமடை அருகே தலையில் கல்லை போட்டு மகளை படுகொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணுவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி நாகமணி (வயது 47). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் மகாலட்சுமி என்கிற நதியா (31). நடராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

நதியாவுக்கும் கோவையை அடுத்த தடாகத்தை சேர்ந்த சரவண குமாருக்கும் இடையே திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து அந்தப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

அவர் வீட்டில் இருந்தபோது குழந்தைகளை சரிவர கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நதியாவை மாமியார் கண்டித்து உள்ளார். இருந்தபோதிலும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நதியாவுக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் நான் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய அவர் அங்கிருந்து நதியாவை துரத்திவிட்டதாக தெரிகிறது.

இதனால் தாய் நாகமணி வீட்டிற்கு சென்ற நதியா, நடந்ததை கூறி அழுதார். பின்னர் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். அப்போதும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை. அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

ஏற்கனவே செல்போனில் பேசியதால்தான் மாமியார் துரத்தி விட்டார், இங்கு வந்தும் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறாயா என்று நாகமணி நதியாவை கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர் தனது தாயை தாக்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக நாகமணி அந்தப்பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர்கள் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி வைத்தனர். இதையடுத்து நாகமணி தனது வீட்டிற்கு சென்று நதியாவுடன் தங்கி இருந்தார்.

அப்போது இரவில் நதியா செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப் படுகிறது.

பின்னர் நள்ளிரவில் நதியா தூங்க சென்றார். ஆனால் நாக மணி தூங்காமல் மகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் பார்த்தபோது நதியா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்.

என்னை அடித்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா என்று எண்ணிய நாகமணி, ஆத்திரம் தாங்காமல் வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை எடுத்து அவர் தலையில் போட்டார்.

இதில் தலை நசுங்கி நதியா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே நாகமணி தனது சகோதரி மற்றும் உறவினர் வீட்டிற்கு சென்று மகளை கொன்று விட்டதாக தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நதியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகளை கொன்ற தாய் நாகமணியை கைது செய்தனர். பெற்ற மகளை தாயே தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.