வவுனியாவில் 2 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மீன் சந்தைக்கு மேலும் நிதி ஒதுக்கீடு : சபையில் தீர்மானம்!!

2090


குழுமாட்டு சந்தியில்..



வவுனியா குழுமாட்டு சந்தியில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் வவுனியா தெற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மரக்கறி மற்றும் மீன்ச ந்தைக்கு மேலும் பல ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




எனினும் குறித்த கட்டிடம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நெளுக்குளம் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பக்கத்தில் அமைந்துள்ளமையினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியின்றி வவுனியா தெற்கு பிரதேச சபையினால் கட்டப்பட்ட குறித்த மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்தினை அகற்றுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று முன்தினம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் விசேட சபை அமர்வு கூட்டப்பட்டது. இதன் போது மரக்கறி மற்றும் மீன்சந்தை கட்டடிடத்திற்கு மின்சாரம் மற்றும் இதர வேலைகளுக்களுக்காக மேலும் பல ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 நிமிடங்களே சபை அமர்வு இடம்பெற்றதுடன் பெருன்பான்மையுடன் நிதி ஒதுக்கீட்டுத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீன் சந்தை 20 லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டதுடன் இவற்றில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தவில்லை.

இதனையடுத்து கட்டடிடத்தின் ஏனைய வேலைகளான மின்சாரம் , நீர் வசதி ஆகியவற்றிக்காக நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமர்வில் நிதி ஒதுக்கிட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இவற்றிக்கான பணிகளை பிரதேச சபை ஊழியர்கள் மூலம் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன் இவற்றிக்கு எவ்வளவு நிதி மேலும் தேவைப்படும் என அமர்வில் ஒதுக்கிடு செய்யவில்லை என்பதுடன் குறித்த கொள்கை அடிப்படையில் தீர்மானமாவே கொண்டு வரப்பட்டுள்ளது.

இதர வேலைகளுக்கான செலவு விபரங்கள் இதுவரை மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான மதிப்பீட்டின் பின்னரே எவ்வளவு நிதி தேவை என கணக்கிட முடியும் என தெரிவித்தார்.