ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு : வெளியாகியுள்ள தகவல்!!

806

டெல்டா மாறுபாடு..

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்ற எல்லைக்குள் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். டெல்டா திரிபுக்கு ஆளான 11 பேர் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கெத்தாராமவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியை சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு வடக்கிலிருந்து இரண்டு பேர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ருவன் விஜேமுனி கூறியுள்ளார்.

இதன்படி, கொழும்பு 01 முதல் 14 வரையிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, கொழும்பு 01, 02, 03, 05, 09 மற்றும் 14 ஆகிய பகுதிகள் அதிக ஆபத்தான இடங்களாகும். அவற்றில் தெமட்டகொட, ஸ்லேவ் ஐலேன் மற்றும் பொரல்ல ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதும், அந்தப் பகுதியில் சுமார் பத்து நோயாளிகள் இருக்கலாம், இதனால் கொழும்பு மற்றும் மன்னாரில் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இருக்க கூடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-