ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளத்தால் 300 மீட்டர் அகலத்தில் திடீரென உருவான ராட்சத பள்ளம்!!

1533


ஜெர்மனியில்..



ஜெர்மனியில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜெர்மனில் அமைந்துள்ள ர்ஃப்ட்ஸ்டாட்- பிளெசெம் என்ற கிராமத்தில் ராட்சத பள்ளமொன்று ஏற்பட்டுள்ளது.



மேற்கு ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன்,ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.




கனமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக ஜெர்மனி உள்ள நிலையில்,சமீப ஆண்டுகளில் இந்த வெள்ளம் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த திடீர் மழையால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் அருகில் இருந்த வீடுகள் அப்படியே அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பல்வேறு மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக எர்ப்ட் நதியில் வெள்ளப்பெருக்கு அபாயகரமான அளவையும் தாண்டிவிட்டது. எர்ப்ட் நதியில் பாய்ந்த வெள்ள நீரானது ர்ஃப்ட்ஸ்டாட்- பிளெசெம் என்ற கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அமைந்திருந்த சிறிய பள்ளத்தில் முதலில் பாயத் தொடங்கியுள்ளது.


இருப்பினும், வெள்ள நீரின் அழுத்தம் தாக்க முடியாமல், அந்த சிறிய பள்ளம் மிகப் பெரிய சிங்க்ஹோல் ஆக வெடித்துவிட்டது. தொடரும் வெள்ளம் காரணமாக அந்தக் பள்ளம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. தற்போது அந்த ராட்சத பள்ளம் சுமார் 300 மீட்டர் அகலமாக உள்ளதுடன், வாகனங்கள், வீடுகள் என்பன அந்த பள்ளத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த ராட்சத பள்ளம் அருகில் வசித்து வந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கிராமத்திற்குத் திரும்ப வேண்டாம் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனி தவிர பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளும்கூட இந்த வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவில் இதுவரை சுமார் 190 பேர் இந்த வெள்ளத்தில் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளத்தால் பல பில்லியின் யூரோ மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஜெர்மனியில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய கனமழை வெறும் இரண்டு நாட்களில் பெய்துள்ளது. அதனால் தான் இப்படியொரு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றமே இதுபோன்ற வெள்ளத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது வெள்ளம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.