வவுனியாவில் வடமாகாண பிரதம செயலாளராக நியமனம் பெற்ற சமன் பந்துலசேனவுக்கு வரவேற்பு!!

1296


சமன் பந்துலசேன..


வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வரவேற்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இன்று (21.07) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.புதிய பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவை மாவட்ட செயலக வாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்று, மாவட்ட செயலகத்தில் கௌரவித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


இதன்போது கருத்து தெரிவித்த புதிய வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் அரச அதிபராக கடமையாற்றினேன்.


இதன்போது அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனக்கு சிறப்பான ஆதரவைத் தந்தனர். ஊடகவியலாளரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

இதன் மூலம் மாவட்ட நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடத்த முடிந்தது. தற்போது புதிய பிரதம செயலாளராக கடமையேற்கின்றேன். அதனையும் சிறப்பாக செயற்படுத்த அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன் எனத் தெரிவித்தார்.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன் பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.