ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை : மத்திய அரசு!!

330

Rajeev

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

இதையடுத்து முருகன் உள்ளிட்ட மூவர் மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

முருகன் உள்ளிட்ட மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்தது.

குற்றவாளிகளை விடுவிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி மத்திய அரசின் கருத்தை அறிந்த பின்பு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை விடுவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

7 குற்றவாளிகளையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு, அரசமைப்புச் சட்டம் பிரிவு 14, 21-ன் படி தவறானதாகும். இந்த வழக்கில் மத்திய அரசின் சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435ல் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, ஒப்புதல் பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறவுள்ளது.