வவுனியாவில் கறுப்பு யூலையை நினைவு கூர்ந்தும் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம்!!

800

ஆர்ப்பாட்டம்..

கறுப்பு யூலையை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் இன்று காலை (23.07) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், அடக்கு முறைகளால் மக்களை அடக்க நினைக்காதே, இராணுவத்தின் கைகளில் கொடுக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே,

பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்கப்படுவாய், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், 1948 முதல் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி காண்டீபன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ச.தனுஸ்காந், கட்சியின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.