சொகுசுப் பேருந்துகளிலும் பொருத்தப்படவுள்ள விமானக் கறுப்புப் பெட்டி!!

512

Bus

விமானங்களில் உள்ளது போலவே, சொகுசு பேருந்துகளிலும் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களின் அரசு பேருந்துகளிள் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

விமானங்களில் பிளாக் பொக்ஸ் என்றழைக்கப்படும் கறுப்பு பெட்டி உள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் தொடர்பு கொண்டு பேசும் உரையாடல்கள், சத்தங்கள் அனைத்தும் அதில் பதிவாகி விடும். விபத்தில் சிக்கும் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து அதில் பதிவாகி உள்ள தகவல்களை ஆய்வு செய்வார்கள்.

அதன்மூலம் விமானத்தில் விபத்துகாலத்தில் நடந்தது என்ன என்பது தெரிந்து விடும். கறுப்பு பெட்டி தகவல்களை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.

கறுப்பு பெட்டியை விரைவுப் பேருந்துகளிலும் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சொகுசு பேருந்துகளில், விரைவில் கறுப்பு பெட்டிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே செல்லும் வோல்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற சொகுசு பேருந்துகளில் கறுப்பு பெட்டிகள் பொருத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடுத்த வாரம் பெங்களூரில் மாநில போக்குவரத்து அதிகாரிகள், வால்வோ மற்றும் ஸ்கேனியா பேருந்துகளின் தயாரிப்பாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது பேருந்துகளிள் கறுப்பு பெட்டி பொருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மேலும் சொகுசு பேருந்துகள் விபத்தில் சிக்கும் போது, பயணிகள் முன்பக்க இருக்கையில் மோதிக் கொள்வதாலேயே உயிரிழப்பு அதிகமாவதாகத தெரிய வந்துள்ளது. அதை தடுக்க பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.