வவுனியாவில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

1754

ஆர்ப்பாட்டம்..

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனையை தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்னால் அதிபர், ஆசிரியர்களின் தொழிற் சங்கங்களின் கூட்டிணைவில் இன்று (23.07) குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிபர், ‘ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு வேண்டும், கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, இலவசக் கல்வியை சிதைக்காதே, கொத்தலாவ பல்கலைக்கழகத்தை நிறுத்து’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர மணிக்கூட்டு கோபுர சந்தி வரை சென்று அங்கிருந்து கண்டி வீதி ஊடாக வவுனியா தெற்கு வலயக் கல்வி பணமனை வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கண்டி வீதி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அதனால் எமது தொழிற்சங்க போராட்டங்கள் தொடரும். இலவசக் கல்வியை ஒழிந்து கல்வியில் இராணுமயமாக்கலை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.

அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பெருளமளவான அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமையால் கண்டி வீதி போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பாதிப்படைந்திருந்தது. பின்னர் பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்திருந்தனர்.