நிலவில் பயன்படுத்திய கமரா 8,35,000 டொலருக்கு ஏலம்!!

433

Moon

நிலவில் பயன்படுத்திய சிறப்புமிக்க கமரா சுமார் 8 லட்சத்து 35 ஆயிரம் டொலருக்கு ஏலம் போனது.

1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை நிலவு ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய அப்போலோ விண்வெளி திட்டங்களில் 14 கமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் அப்போலோ-15 ஓடத்தில் அனுப்பிய கமரா மட்டுமே பூமிக்கு திரும்ப கொண்டு வரப்பட்டது. நிலவின் பாறைத் துகள்களை ஏற்றி வருவதற்காக, அதிக எடை கொண்ட இத்தகைய கமராக்களை நிலவிலேயே விட்டு விட்டு வந்துள்ளனர்.

அப்போலோ-15 திட்டத்தின்போது அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் இர்வின் பயன்படுத்திய இந்த ‘ஹாசல்பிளாட்-500’ ரக கமரா வியன்னாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதன் அடிப்படை விலையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் யூரோ நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தின் முடிவில், ஜப்பான் தொழிலதிபர் டெருகாஜு புஜிசவா, கேமராவை 8 லட்சத்து 35 ஆயிரம் டாலருக்கு வாங்கினார்.

விஞ்ஞானி இர்வின் நிலவில் எடுத்த புகைப்படங்களில் காணப்படும் ‘38’ என்ற எண், இந்த கேமராவில் உள்ள ஒரு சிறிய தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.