யாழில் புறா சண்டை எதிரொலி : இளைஞர்களுக்கு மிளகாய் தூள் அடித்த பெண்கள் : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

21398

யாழில்..

நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பேயாட்டம் ஆடி பெண்கள், அந்த இளைஞனை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் தூவி, பச்சை மிளகாய் தடவி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையினாலேயே இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

பேயாட்டம் ஆடிய பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. நாவாற்துறை, கண்ணாபுரம் பகுதியில் அண்மித்த வீடுகளில் உள்ள இரண்டு இளைஞர்கள் புறா வளர்க்கிறார்கள். ஒருவரின் புறாவை, மற்றவரின் புறா தனது பகுதியில் இறக்கி விட்டது.

புறா வளர்ப்பாளர்களிற்குள் நிலவும் நடைமுறைப்படி,அடித்து இறக்கப்படும் புறா, அடித்து இறக்கும் புறாவின் சொந்தக்காரருக்கே உரியது. எனினும், தான் ஆசையாக வளர்க்கும் புறாவை ஒப்படைக்கும்படி, புறா உரிமையாளர் கோரினர். புறாவை இறக்கியவர் மறுத்தார். இதனால் தர்க்கம் ஏற்பட்டது.

சர்ச்சையின் உச்சத்தில், புறாவை ஒப்படைக்கக் கோரியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலிற்கு உள்ளானவர் தனது நண்பர்களை அழைத்து விடயத்தை தெரியப்படுத்தினார். இதையடுத்து 4 பேர் தாக்கிய புறா உரிமையாளரை தாக்கினார்கள். இந்த நான்கு பேரில் சுந்தனும் ஒருவர்.

மிளகாய்த்தூள் தாக்குதல் : இதையடுத்து தாக்கப்பட்டவர்கள் தரப்பினர், தாக்கியவர்கள் தரப்பினரிடம், “சின்ன வயதிலேயே இதென்ன குழு மோதல். ஊருக்குள் ஒன்றாக இருந்தபடி குழு மோதலில் ஈடுபட்டு பொலிஸ் நிலையம் செல்வது நல்லதல்ல.

தாக்குதல் நடத்திய 4 பேரையும் சென்று, தாக்குதலிற்குள்ளானவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அங்கு செல்லும் போது அவர்களை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்“ என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருமே 20, 21 வயதிற்குட்பட்டவர்கள்.

“ஊருக்குள் பிரச்சனை வரக்கூடாது என்ற நோக்கத்துடன், அவர்களின் வார்த்தையை நம்பி எமது பிள்ளைகளை மன்னிப்பு கேட்க அழைத்துச் சென்றோம்“ என, அந்த 4 பேரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்த 4 பேரையும் அழைத்தது, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிக்க அல்ல, மேலும் பிரச்சனையை வளர்க்கவே என்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது.

4 இளைஞர்களும் வந்ததும், அந்த பகுதியிலுள்ளவர்கள் அவர்களை வளைத்துப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றதுடன், அவர்களுடன் வந்தவர்களை வீட்டிற்கு வெளியே விட்டு, வாயில் கதவை மூடிவிட்டனர்.

4 இளைஞர்களையும் உள்ளே இழுத்து சென்று, கடுமையாக தாக்கினார்கள். குறிப்பாக பெண்களே இதில் முன்னிலை வகித்தனர். இளைஞர்களை தாக்கி, அவர்களின் முகங்களை வீடியோ படம் பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, பச்சை மிளகாய் பூசி காட்டேறியாட்டம் ஆடினர்.

பிறந்தநாளில் நடந்த துயரம் : அத்துடன், அந்த வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றினர். அது ஊருக்குள் வைரல் ஆனது. இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது 15 நாட்களின் முன்னர்.

இந்த சர்ச்சையையடுத்து, சுகந்தனின் தந்தை, கிளிநொச்சியிலுள்ள தனது சகோதரனின் வீட்டில் அவரை சில நாட்கள் தங்க வைத்துள்ளார். இந்த நாட்களில், வீடியோ வெளியானது குறித்து நண்பர்களிடம் மனம் வெதும்பி சுகந்தன் பேசி வந்ததாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25ஆம் திகதி சுகந்தனின் 20வது பிறந்தநாள். மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தாய், அவரை வீட்டுக்கு வந்துவிட்டு செல்லும்படி கேட்டிருக்கிறார். அன்று சுகந்தன் வீடு திரும்பினார்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், கலந்து கொண்ட சிலர் பகிடியாக சுகந்தனை கலாய்த்துள்ளனர். “என்னடா, பொம்பிளையளிட்ட அடி வாங்கியிருக்கிறியள் போல. வீடியோ எல்லாம் தாறுமாறாக இருக்கிறது.

பொம்பிளையளிட்ட அடி வாங்கிப் போட்டு கேக் வெட்டிறியளோ“ என பகிடிவிட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சுகந்தனிற்கு இது மேலும் விரக்தியை ஏற்படுத்தியதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு இரவு அனைவரும் உறக்கத்திற்கு சென்றனர். திங்கள் கிழமை தாயார் காலையில் கண்வழித்த போது, வீட்டு ஹோலில் படுத்திருந்த சுகந்தனை காணவில்லை.

அவரை தேடிய போது, அறை உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. இதையடுத்து அறையை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த போது சுமந்தன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

வைத்தியசாலையில் சடலத்திற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மாலை சுகந்தன் தாக்கப்பட்டு, வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இளைஞர்களிற்கிடையிலான மோதல் குழு மோதலாக மாறுவதால் ஏற்படும் விபரீதத்தை இளைய சந்ததிக்கு ஒரு பாடமாக இந்த சம்பவம் சுட்டிக்காட்டுவதுடன், பெண்களின் அத்துமீறிய நடவடிக்கையும் விபரீதத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.