கோவில்குளம்..

வவுனியாவில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு நோக்கி நடந்து சென்ற பெண்மணி ஒருவரை கடந்த 19.07.2021 அன்று வெள்ளைவானில் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைத்திருடிவிட்டு பெண்மணியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றமை குறித்து பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .

இந்நிலையில் நேற்று (29.07) குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அண்மையில் வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஆலயத்திலிருந்து நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியதாவர்கள் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையை திருடிவிட்டு அப்பெண்மணியை வானிலிருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்.

இச்சம்பவம் குறித்து பெண்மணியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின்போது குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட 28 வயதுடைய,

பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பிற்பகல் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய வெள்ளை நிற டொல்பின் ரக வான் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சந்தேக நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : வவுனியாவில் வானில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை!!

வவுனியாவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (19.07) காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு வீடு நோக்கிய திரும்பிய முதிய பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் வான் அருகில் சென்ற போது அவர்கள் குறித்த பெண்ணை வானில் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். குறித்த பெண்ணை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக வானில் கொண்டு சென்ற குறித்த நபர்கள் மதியமளவில் பெண் அணிந்திருந்த 3 பவுண் தங்க காப்பை கழற்றி விட்டு பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து, தமக்கு நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று, தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட போது குறித்த பெண் சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு உட்பட 9 பவுண் நகைகளை அணிந்திருந்த போதும் வானில் கடத்தியவர்கள் 3 பவுண் காப்பினை மட்டுமே கழற்றி விட்டு பெண்ணை இறக்கி விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.




