சட்டவிரோத உத்தரவு பிறப்பிப்பதை விக்னேஸ்வரன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் : நீதிமன்றம்!!

588

SLCourtவடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு பிறப்பித்திருந்த சில உத்தரவுகளுக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தவிர வடமாகாண பிரதம செயலாளருக்கு சட்டவிரோதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விக்னேஸ்வரன் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியது.

வடமாகாண பிரதம செயலாளர் மாகாணத்தை விட்டு வெளியே பயணம் செல்லவேண்டுமானால் அதற்கு தனது உத்தரவை முன்கூட்டியே வாங்க வேண்டும் என வட மாகாண முதல்வர் உத்தரவிட்டிருந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவிர விஜயலக்ஷ்மி ரமேஷ் வெளியில் கருத்து சொல்லவும் முதல்வர் தடை விதித்திருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியான மாகாண செயலருக்கு முதலமைச்சர் இவ்விதமான தடைகளைப் போட அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று இந்த மனுவில் வாதிடப்பட்டிருந்தது.

மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், வடமாகாண பிரதம செயலாளர் மீது முதல்வர் போட்ட உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

தவிர இவ்வகையான சட்டத்துக்கு முரணான உத்தரவுகளை வழங்குவதை முதல்வர் விக்னேஸ்வரன் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-பிபிசி தமிழ்-