வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது!!

1722

வீரபுரத்தில்..

வவுனியா வீரபுரத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை சாரதி உட்பட இருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வவுனியா வீரபுரம் உள்ளக வீதியில் நேற்று (01.08.2021) மாலை நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி – இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் என மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானமை தொடர்பில்,

செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளரான ராஜேந்திரன் சஜீவன் மீது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி மற்றும் வானில் பயணித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் ஊடகவியலாளரின் புகைப்பட கமராவையும் பறித்து வீசியதுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.

ஊடகவியலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய நேற்றிரவு (01.08.2021) ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்து,

விசாரணைக்காக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டு நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் இன்று(02.08.2021) காலை 8.30 மணிக்கு செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.