பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார் சீனிவாசன்!!

515

srinivasan

பிசிசிஐ-யின் தற்போதைய தலைவர் சீனிவாசன் தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய பிரீமியர் லீக் தொடர்பில் எழுந்துள்ள பந்தயம் கட்டுதல், ஆட்ட நிர்ணயம், ஊழல் ஆகிய முறைகேடுகள் தொடர்பில் நியாமான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த இவர் பதவி விலக வேண்டும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஐபிஎல்லில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிபதி முட்கல் தலைமையிலான குழு சம்பித்த அறிக்கையை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் நீதிபதி பக்கிர் முஹமத் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிசிசிஐ-யின் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் தானாக முன்வந்து விலகாவிட்டால், அவர் பதவி விலக வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் எழுந்த பந்தயம் கட்டுதல், சூதாட்டம் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து அது தொடர்பிலான அறிக்கையை பெப்ரவரி 10ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியாக இருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலும் விசாரணை தேவை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் தலைவர் பதவி வகித்த சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாடுகள் தொடர்பில் தனது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

பின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

இந்த வருடம் பெப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பன் ஆகிய இருவரும் எல்லா குற்றச்சாட்டுகளையும் இதுவரை மறுத்துவந்தனர்.

இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் பங்குபெறும் இந்த ஐபில் கிரிகெட் போட்டிகள் உலகில் அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 38 பேர் மீது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம், இந்திய கிரிக்கெட் வாரியம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வீரர்களான ஸ்ரீசாந்த் அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் முழுக்க போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.