வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை!!

1573

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரம்பலை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 16 இலட்சம் தடுப்பூசிகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. அதில் முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்திற்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி காரணமாக மக்கள் பாதிக்கபபடுகிறார்கள். இதனால் அதனை களைந்து செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

கட்டுப்பாட்டில் இருந்தது போல் மாகாண போக்குவரத்து முடக்கம் வரக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை.

வவுனியா மாவட்டத்தில் தான் அதிகளவிலான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. மக்கள் அதனைப் பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், இராணுவத்தினர், பொலிசார், அரச அதிகாரிகள், சுகாதார திணைக்களத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் கோவிட் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.