வவுனியாவில் பொது நிகழ்வுக்கு சென்ற ஊடகவியலாளருடன் அநாகரிகமாக நடந்து கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்!!

2708

பொது நிகழ்வுக்கு சென்ற ஊடகவியலாளருடன் அநாகரிகமாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் அவர்கள் நடந்து கொண்டு உள்ளார்.

இன்று (09.08) பிற்பகல் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கொவிட் தொடர்பான உதவித் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வு தொடர்பில் உதவித் திட்டம் வழங்கும் அரச சார்பற்ற நிறுவனத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது அங்கு இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் குறித்த ஊடகவியலாளரை வெளியேறுமாறும், தரக்குறைவான வகையில் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் அங்கிருந்து வெளியேறிய போது, உதவித்திட்ட வழங்குனர்களால் தாமே ஊடகவியலாளரை அழைத்ததாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எனினும் அவர் எதனையும் கண்டு கொள்ளவில்லை. இச் சம்பவத்தின் போது வவுனியா உதவிப் மாவட்ட செயலாளர் மு.சபர்ஜா உள்ளிட்டவர்களும் அங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் தயாராகி வருகின்றனர்.