இலங்கை பெண் மரண விவகாரம் : மன்னிப்பு கோரிய ஜப்பான்!!

1095

விஸ்மா சந்தமாலி..

தடுப்பு முகாமில் இலங்கைப் பெண் மரணித்த விவகாரம் குறித்து ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணித்தமைக்காக மன்னிப்பு கோருவதாகவும்,

தடுத்து வைக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் ஜப்பான் உறுதியளித்துள்ளது. ஜப்பானிய நீதி அமைச்சர் யாகோ காமிகாவா இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

33 வயதான விஸ்மா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு ஜப்பானில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். வீசா காலம் முடிவடைந்தும் ஜப்பானில் தங்கியிருந்த காரணத்திற்காக சந்தமாலி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் குறித்த பெண் வயிற்று வலி உள்ளிட்ட சுகாதார கேடுகள் பற்றி குறிப்பிட்ட போதிலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தமாலியின் மரணத்திற்காக அவரது தாய் உள்ளிட்ட உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு தடுப்பு முகாம்களில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கத்தின் மன்னிப்பு இந்த சம்பவத்தின் பாரதூரதன்மைக்கு போதுமானதல்ல எனவும் சந்தமாலியின் இறப்பிற்கு யார் பொறுப்பு என குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.