கொரோனா..
நோய்களுக்குரிய எந்தவித அறிகுறிகளும் அற்றவர்களும் கோவிட் தொற்றால் மரணமடைவதால் மக்கள், அவதானமாக இருக்க வேண்டும் என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பெரியார்குளம், சாந்தசோலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த 73 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (19.08) மரணமடைந்திருந்தார். குறித்த பெண் எந்தவித நோய்களும் அற்ற நிலையில் இருந்ததுடன், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளும் அற்றவராகவே இருந்துள்ளார்.
குறித்த பெண் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்திருந்தார். மரணமடைந்த பின் அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவருடைய உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவருடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்புகளைப் பேணியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் இன்று (20.08) காலை அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதேபோன்று, தெற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களும் கோவிட் தாக்கம் காரணமாக மரணமடைந்து வருகின்றனர்.
எனவே மக்கள் நிலமையை உணர்ந்து சுகாதார நடைமுறைகனைப் பின்பற்றி சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.