ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஏமாற்றப்பட்ட விவகாரம் : நடிகர் ஆர்யாவின் பெயரில் அரங்கேறிய மோசடி!!

1619

நடிகர் ஆர்யாவின் பெயரில்..

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல நடிகரொருவரின் பெயரில் இடம்பெற்ற மோசடியொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சென்னையை சேர்ந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ஆர்யா தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக ஜேர்மனியில் வசித்து வரும் இலங்கை பெண்ணொருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஒன்லைனில் அளித்த குறித்த முறைப்பாட்டில் நடிகர் ஆர்யா தன்னிடம் பல இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் அனுப்பப்பட்டமைக்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 10ஆம் திகதி ஆர்யா பொலிஸார் முன்பு ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தார்.


இதையடுத்து நடிகர் ஆர்யாவின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்த தொலைபேசி எண்ணிலிருந்து முறைப்பாட்டை பதிவு செய்த பெண்ணுக்கு எந்த அழைப்பும், குறுந்தகவலும் செல்லவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இணைய குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சென்னை – புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரின் மைத்துனரான முகமது ஹுசைனி ஆகியோர் வசமாக சிக்கியுள்ளனர்.

குறித்த நடிகரின் பெயரை பயன்படுத்தி சந்தேகநபர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இணையதளத்தில் தன்னை ஆர்யாவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அர்மான் தான் அந்த ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியுள்ளதுடன், அவருக்கு ஹுசைனி துணையாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 2 கைத்தொலைபேசிகள், மடிக்கணினி என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.