வவுனியா மாவட்டத்தில் 17 ஆயிரத்து 270 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க துரித நடவடிக்கை!!

1285

2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..

வவுனியா மாவட்டத்தில் 17 ஆயிரத்து 270 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின்படி அதனை பெறுவதற்கு 17 ஆயிரத்து 270 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இரு தினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கி முடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த நிதியினை எமது உத்தியோகத்தர்கள் நேரடியாகவே வீடுகளிற்கு சென்று வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.