வவுனியாவில் தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : மூவருக்கு கொரோனா தொற்று!!

1816

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (28.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர் வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 20 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.