வவுனியாவில் மரக்கறி வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று : சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை!!

3324

கொரோனா..

ஊரடங்கு சட்ட நேரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

ஊரடங்கு சட்ட நேரத்தில் கிராமங்களுக்கு சென்று மரக்கறி விற்பனை செய்யாது வவுனியா நகரப் பகுதியில் கடைகளைத் திறந்தும், வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்தும் மக்களை வரவைத்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட 10 பேர் வரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள தண்ணீர் கடையின் அருக்கில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சுகாதாரப் பிரிவினர் சென்று குறித்த மரக்கறி வியாபாரிகளை அகற்றும் வரை மக்கள் பலரும் வருகை தந்து மரக்கறிகளை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குறித்த மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்று மரக்கறிகளை கொனள்வனவு செய்தோர் சமூகப் பொறுப்புடனும்,

தமது பாதுகாப்பு கருதியும் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வருகை தந்து அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.