வவுனியா மின் மயானத்தில் சடலங்களை கட்டணமின்றி எரியூட்டுமாறு மாக்ஸ்சிச கட்சி கோரிக்கை!!

1332

புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி..

கொரோனா பெருந்தொற்று காலத்தினை பேரிடர்காலமாக கருத்தில்கொண்டு கட்டணமின்றி சடலங்களை எரியூட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் மூலம் அதிகளவு மரணங்கள் பதிவாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வன்னி மாவட்டத்திலும் இறப்புக்கள் அதிகரித்துள்ளது.

இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் வரை குடும்ப உறவுகள் செலவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இறப்பவர்களில் அதிகமானோர் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான எரிவாயு மாயானத்தில் ஒரு சடலத்தினை எரியூட்டுவதற்கு 7 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகின்றது. இது நிறுத்தப்பட்டு எதுவித கட்டணமும் இன்றி சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

இறப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாக இருப்பின் கிராமசேவையாளரால் அவர்களது வறுமை நிலை உறுதிப்படுத்திய சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் கட்டணமின்றி உடல்களை எரியூட்டமுடியும் என்று வவுனியா நகரசபை நிர்வாகம் கூறுகின்றது. இது மரத்தில் இருந்து வீழ்ந்தவரை மாடு ஏறி மிதிப்பது போன்றதாகிவிடும்.

எனவே, கொரோனா பெருந்தொற்று காலத்தினை தேசிய அனர்த்த பேரிடர் காலமாக கருத்தில் கொண்டு துயர் அடைந்திருக்கும் குடும்ப உறவுகளை மேலும் அசௌகரியங்களிற்கு உட்ப்படுத்தாமல் எந்தவித கட்டணமுமின்றி அந்த சடலங்களை எரியூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறித்த விடயத்தில் மத்திய அரசு, மாகாண உள்ளூராட்சி சபைகள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், சுகாதாரத் திணைக்களம் ஆகிய தரப்பினர்கள் ஒன்றிணைந்து உரிய பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.