வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்!!

479

Baby

குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக நான்கு மாதங்களே நிரம்பிய தனது மூன்றாவது பெண் பிள்ளையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு என்ற இடத்தில் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு எட்டாயிரம் ரூபாவிற்கு விற்றுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிள்ளை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை பிள்ளையையும் தாயையும் பிள்ளையை வாங்கிய குடும்பப் பெண்ணையும் கைது செய்துள்ளதுடன் குழந்தைiயும் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..



சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தகப்பன் குழந்தை வயிற்றில் எட்டு மாதமாக இருக்கும் போதே மனைவியை விட்டு சென்று விட்டார். குழந்தை பிறந்ததும் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உத்தேசித்தே குழந்தையை தாய் விற்றுள்ளார்.

இப்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பவதாக வாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி இப்பெண் குழந்தையை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு தயாராகியுள்ளார்.

வெளிநாட்டு முகவர் குழந்தையின் தாயை சட்ட ரீதியற்ற வைத்தியரிடம் அழைத்துச் சென்று தாய்ப்பாலை கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்தினையும் செலுத்தியதுடன் வெளிநாடு செல்வதற்கான சகல ஆவணைங்களையும் தானே தயார் படுத்துவதாகவும் நீங்கள் எதற்கும் யோசிக்க தேவையில்லை என்றும் கூறியதாக குழந்தையின் தாய் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், முகவர்கள் வறுமையைக் காட்டி தாயையும் குழந்தையையும் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக அறிய முடிவதாகவும் இச்சம்பவம் தெடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.