கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்!!

1145

கர்ப்பம் தரிப்பதை..

இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவுவதால் கர்ப்பம் தரிப்பதை, ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சொய்சா மகப்பேறு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷா அத்தபத்து, நேற்று விடுத்த வேண்டுகோள் தொடர்பில், சுகாதார சேவைகள் துணைப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சின் அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.அவர்கள் தங்கள் கருத்துக்களையே தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், தற்போதைய நிலையில் இது ஒரு நியாயமான கோரிக்கையாகும் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு பயங்கரமான டெல்டா மாறுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும், இது கர்ப்பத்தை தாமதப்படுத்த யாரையும் கட்டாயப்படுத்துவது அல்ல, ஆனால் கர்ப்பிணிப் பெண்களை மோசமாகப் பாதிக்கும் தொற்றுநோயின் தீவிரத்தை மக்களுக்குப் புரிந்துகொள்ள உதவுவதாக ஹேரத் கூறியுள்ளார்.