வவுனியாவில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று!!

2379

டெல்டா வைரஸ்..

செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (11.09) வெளியாகின.

அதில் செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலும் 15 பேர் டெல்டா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேர் இனங்காணப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களை டெல்டா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, டெல்டா வைரஸ் தொற்று பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.