கணவனை தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த மனைவி மற்றும் மகள்!!

1591

புத்தளத்தில்..

புத்தளத்தில் கணவன் உயிரிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், கணவனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

வேப்பமடு பிரதேசத்திலுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட, நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவரின் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று காலை சடலம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் காலமான குறித்த நபர், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரு நாட்களின் பின்னர் 6ஆம் காலை அவரது மனைவி சித்தி அஜீபாவும் (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) குறித்த தினத்தின் நண்பகல் வேளையிலும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 4ஆம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தாருக்கு (வயது 56) கோவிட் தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.