வவுனியாவில் பழ விற்பனை வாகனங்கள் மீது நகரசபை சோதனை : நகரசபையின் செயற்பாட்டிற்கு இடையூறு!!

2206

வவுனியா, குருமன்காடு பகுதியில் பழ விற்பனை வாகனங்கள் மீது நகரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில், நகரசபையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாடு பூராகவும் அமுலில் உள்ள போதும் வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் வழமை போன்று வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் செயற்பாடுகளும், வர்த்தக நிலையங்களை அரைவாசி திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

இது குறித்து சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நகரசபை என்பவற்றின் கவனத்திற்கு பலரும் கொண்டு வந்திருந்த நிலையில், வவுனியா, குருமன்காடு பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நகரசபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்பாப்பட்டது.

இதன்போது, குருமன்காடு பகுதியில் வாகனங்களில் பழ விற்பனையில் ஈடுபட்ட இரு வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாது இடம்பெற்ற வியாபார நடவடிக்கைகள் குறித்து நகரசபையினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போது,

வாகனத்தில் வைத்து பழ வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்காது போக்குவரத்து பொலிசாரை அழைத்து நகர சபையினருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, போக்குவரத்து பொலிசார் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, நகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி கோவிட் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் பொறுப்பற்ற வகையில் இடம்பெறும் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.