மன்னாரில் கனிய எண்ணெய் வளம் : பல பில்லியன்களை இலக்கு வைத்து ஆய்வில் களமிறங்கும் பிரித்தானியா!!

1068

மன்னாரில்..

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் காணப்படும் பல பில்லியன்கள் பெறுமதியான கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரபல ஆய்வு நிறுவனமொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ள நிலையில் புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசிற்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

-தமிழ்வின்-