வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் கொரோனா தொற்றால் மரணமடைந்த 28 பேரின் சடலங்கள்!!

2134

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 28 பேரின் சடலங்கள் தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த மின் மயானத்தில் நாள் ஒன்றுக்கு 6 சடலங்களையே தகனம் செய்யக் கூடியதாகவுள்ளது. ஆனால், தற்போது வவுனியா உட்பட மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவடங்களில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதனால் சடலங்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்த 28 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய நான்கு தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கொரோனா தொற்றில் இருந்து விடபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.