வவுனியாவில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடலை சீரழிக்காது தகனம் செய்யுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள்!!

1892

கொரோனா..

கோவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களை இறுதி நேரத்தில் பார்க்க முடியவில்லை. தகனத்தையாவது உடனடியாக செய்து ஆத்ம சாந்திக் கிரியைகளைச் செய்வதற்கு உதவுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் உருக்கமாகக் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணித்த 20 வரையிலான சடலங்கள் இதுவரை தகனம் செய்யப்படாத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் உள்ளன. சில சடலங்கள் கடந்த 8 நாட்களாகத் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், கோவிட் தொற்று காரணமாக மரணித்த தமது குடும்ப உறவுகளை குடும்பத்தினர், உறவினர்கள் முழுமையாகப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த முடியாத நிலை உள்ளது. தகனம் செய்து, அஸ்தியைப் பெற்று ஆத்ம சாந்தி கிரியைகள் மூலமே மரணித்த உறவுகளின் சோகத்தை ஆற்ற முடிகின்றது.

அதனைக் கூடச் செய்ய முடியாது பல நாட்டைகளாக இறந்தவரின் உடல்களைத் தகனம் செய்யாது, இறந்த பின் கூட உடலை நீண்ட நாள் வைத்து உருக்குலைக்காதீர்கள். இது அவர்கள் இறந்த பின் கூட நிம்மதியாகத் தகனம் செய்ய முடியவில்லையே என்ற வேதனையைத் தருகின்றது. இறந்த துயரைக் காட்டிலும் சடலத்தை வைத்து இழுத்தடிப்பதால் வரும் துயரத்தைத் தாக்க முடியவில்லை.

எனவே, உரிய அதிகாரிகள் இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் தகனம் செய்வதற்கு உதவ வேண்டும் என மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மயானம் கடந்த சில நாட்களாகப் பழுதடைந்து காணப்பட்டமையால் சடலங்கள் தேக்கமடைந்திருந்ததாகவும், தற்போது மீண்டும் இயங்குகின்ற போதும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 சடலங்களையே குறித்த மின் மயானத்தில் தகனம் செய்ய முடிவதால் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் சடலங்களை எரிப்பதற்கான பெயர் விபரங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அடிப்படையில் நகரசபையினால் தரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.