வவுனியாவில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படாது மீள ஒப்படைக்கப்பட்ட சடலம்!!

2340

வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலம் ஒன்று வழமையாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை எதுவும் முன்னெடுக்கப்படாது, மீளவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மரணமடைபவர்களின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோவிட் தொற்று தொடர்பில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு,

அதன் முடிவுகளின் பிரகாரமே சடலங்களை அடக்கம் செய்யும் செயற்பாடுகள் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து குறித்த சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காகச் சடலத்தை ஏற்றும் வாகனம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த வாகனத்தை மரணித்த பெண்ணின் உறவினர்கள் திருப்பி அனுப்பி விட்டு, வவுனியா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து அதில் சடலத்தை ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதும், வழமையாக முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உடனடியாக குறித்த சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்து மரணித்தவர்கள், வீட்டில் மரணித்தோர் எனப் பலரது சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் பலர் தொற்றாளர்களாகவும் இனங்காணப்பட்டும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சடலத்திற்கு வழமையான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படாதும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாதும் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியும் சடலத்தைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது, வைத்தியசாலை அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், அதிகார பலத்தால் நடைமுறைகள் மாற்றப்படுவதாகவும் சாதாரண அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.